உலகத்தை அச்சுறுத்திவந்த கரோனா வைரஸ் தற்போது உருமாறி ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸாகப் பரவ ஆரம்பித்துள்ளது. உலக நாடுகள் தற்போது மீண்டும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கியுள்ள நிலையில், சர்வதேச வழித்தடங்களைத் தற்காலிகமாக மூட பல நாடுகள் முன்வந்துள்ளன. அதேபோல், இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச எல்லைகளை இதுவரை மூடாமல் உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் இந்தப் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இன்று (02.12.2021) காலை சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளை முறையாக சோதனை செய்து, சோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே அவர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தப் புதிய கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகள் குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் கூறுகையில், “வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களில் 282 பயணிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு மூன்றரை மணி நேரத்தில் முடிவுகள் பெறப்பட்டு, பயணிகள் வெளியே அனுப்பப்பட்டுவருகின்றனர்” என்று தெரிவித்தார். மேலும் அவர், “சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் உறவினர்கள் 5 மணி நேரம் தாமதமாக வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பயணிகள் பயன்படுத்தக்கூடிய அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. பாதுகாப்பு கருதி தொடர்ந்து கிருமிநாசினிகள் தெளிப்பதோடு, மக்கள் பயன்பாட்டிற்கு ஆங்காங்கே சானிடைசர்களும் வைக்கப்பட்டுள்ளன.