கள்ளக்குறிச்சி மாவட்டம், அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு. இவரது மகன்கள், இவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர். இதனால், அவர் வசிப்பதற்கு வீடு ஏதும் இல்லாமல் போக, அந்த ஊரில் உள்ள பேருந்து நிழற்கூடையில் மூட்டை முடிச்சுகளுடன் வசித்து வந்தார்.
இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதைக் கண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் அந்த ஊருக்கு சென்று அலமேலுவை நேரில் சந்தித்தார். மேலும், அவருக்கு உதவித்தொகை வழங்கியதோடு, இந்த விவகாரத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றார். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று அலமேலுவின் பொருட்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டனர்.
அலமேலுவை வீட்டுக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவரது மகன்களை சந்தித்து அறிவுரை வழங்கினர். அதோடு இனி வரும் காலங்களில் தாயை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது மகன்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.