தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ளது முடச்சிக்காடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி புஷ்பவள்ளி (75). கணவர் இறந்த பிறகு தனது மகன் மருமகளுடன் லியாக்கத் அலி என்பவரின் தோட்டத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார். மருமகளுக்கு யாழினி என்ற பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளில் மருமகளும் அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் மகனும் இறந்துவிட்டனர்.
3 வயதிலேயே தாய், தந்தையை இழந்த பேத்தியை வளர்க்கும் பொறுப்பு பாட்டி புஷ்பவள்ளியின் தலையில் சுமத்தப்பட்டது. தான் படும் கஸ்டங்களை தன் பேத்தி படக்கூடாது என்பதற்காக நல்லா படிக்க வேண்டும் என்று பேத்தியை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பகலில் பாட்டி கூலி வேலைக்கும் பேத்தி பேராவூரணி பள்ளிக்கும் சென்றுவிடுவர். மின்சாரம் கூட இல்லாத குடிசையில் இருந்துதான் +2 படித்து வருகிறார்.
வழக்கம்போல புதன் கிழமை புஷ்பவள்ளி கூலி வேலைக்கும், யாழினி தேர்வு எழுத பள்ளிக்கும் சென்றுவிட தோட்டத்தில் இருந்த கீற்றுக் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. கொட்டகைக்குள் இருந்த துணிமணி, பாடப் புத்தகம், ஆதார், ரேசன் கார்டு, பாஸ்புக், பாத்திரங்கள் என அத்தனையும் எரிந்து சாம்பலானது. ஒரு தகர பீரோவும் எரிந்து கிடக்க அதற்குள் பேத்திக்காக பல வருட உழைப்பில் வாங்கி வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணமும் எரிந்து கிடந்தது. வேலை முடிந்து வந்த மூதாட்டி அப்படியே உடைந்து போனார். பள்ளியிலிருந்து வந்த யாழினி உறைந்துபோய் நின்றார்.
தகவல் அறிந்து வந்த ஊ.ம. தலைவர் உள்ளிட்ட கிராமத்தினர் தற்காலிகமாக தங்க வைத்து உணவு மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நேரில் சென்று ஆறுதல் சொன்னபோது, என் பேத்திக்காக பீரோவுல சேத்து வச்சிருந்த ஒரு பவுன் நகையும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் எல்லா பொருளும் எரிஞ்சு போச்சுய்யா.. இனி நான் என்ன செய்வேன். என் பேத்திய எங்கே எப்படி வச்சு காப்பாத்துவேன் என்று கைகளைப் பற்றி கலங்கினார். தற்காலிக நிவாரணம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் சொல்லி உதவிகள் செய்வதாகச் சொல்லிச் சென்றார். சிலர் சின்னச் சின்ன உதவிகள் செய்துள்ளனர்.
ஆனால் மூதாட்டி தன் பேத்தியைப் பாதுகாப்பாக வளர்க்க ஒரு வீடு தேவை. அந்த வீடு கட்ட இடம் தருவதாகத் தோட்ட உரிமையாளர் லியாக்கத் அலி கூறியுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ், நடிகர் சூர்யா போன்றோர் கவனத்திற்குப் போனால் வீடு மட்டுமின்றி யாழினி படிப்பிற்கும் உதவியாக இருக்கும் என்கின்றனர்.