
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தவர் குப்பம்மாள்(98). வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு பணிகளை செய்து வருவார். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் இல்லாததால் அவரைத் தேட தொடங்கினர். அவர்கள் தேடத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே குப்பம்மாள் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், பாலக்கரை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் வந்து நடத்திய விசாரணையில், கிணற்றில் மிதப்பது மூதாட்டி குப்பம்மாள் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டனர். அதன்பிறகு அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றில் தள்ளி விட்டார்களா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.