முதியோர் உதவித் தொகை உள்பட அரசு நலத்திட்டங்கள் பெற அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து நலத்திட்டம் கிடைக்காமலேயே ஓய்ந்து போய்விடுகிறார்கள், நலிவுற்ற மக்கள். ஆனால், ஒரு அதிகாரி விடு தேடிச் சென்று முதியோர் உதவித் தொகையும் முதிர்கன்னிக்கான உதவித் தொகையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம் சம்மட்டி விடுதி ஊராட்சி மேலவிடுதி கிராமத்தில், ராஜா இரு கால்களையும் இழந்த இளைஞர். இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட கழிவறை இல்லாமல் தன் மனைவியின் துணையால் எல்லாம் செய்து வருகிறார். கால்களை இழந்த கணவரை தன் குழந்தையைப் போல பாதுகாத்துப் பணிவிடை செய்துவரும் காதல் மனைவி விமலா. இந்தச் செய்தி, 'நக்கீரனில்' வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேரில் சென்று உதவிகள் செய்து, முகம் சுழிக்காமல் கால்களை இழந்த கணவருக்கு 4 வருடமாகப் பணிவிடை செய்து வரும் விமலாவைப் பாராட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக, ஆட்சியர் வருவதற்கு முன்பே மேலவிடுதி கிராமத்திற்கு வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ராஜா, வீடு அருகே ஒரு கொட்டகை வாசலில் மூதாட்டி ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தவர் "என்னம்மா உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க" என்று விசாரிக்க, "நானும் 50 வயசுக்கு மேலாகியும் கல்யாணம் ஆகாத என் மகளும் தான்" இருக்கோம்ய்யா என்று தெரிவித்துள்ளார்.
"முதியோர் உதவித்தொகை வாங்குறீங்களா?" என்று அதிகாரி கேட்க, "இல்லங்கய்யா, எழுதிப் போட்டோம் வரல!" என்று தளர்ந்த குரலில் சொல்ல, உடனே அந்த மூதாட்டி சிவப்பாயி மற்றும் அவரது மகள் முதிர்க்கன்னியான வள்ளிக்கண்ணு ஆகிய இருவரிடமும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து உடனே இருவருக்கும் அரசின் மாதாந்திர உதவித் தொகை கிடைக்க நடவடிக்கையை எடுத்தார் கோட்டாட்சியர்.
மேலும், அவர்களது ஆவணங்களையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கி, "டிசம்பர் மாதத்தில் இருந்து உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுங்கள்!" என்று அருகில் நின்ற வருவாய் ஆய்வாளரிடம் கூறினார்.
பல வருடமாக மனு எழுதியும் கிடைக்காத உதவித் தொகை, வீடு தேடி வந்து கொடுக்க உத்தரவிட்ட கோட்டாட்சியர் தண்டாயுதபாணியை பார்த்துக் கரம் கூப்பி கண்ணீர் மல்க இருவரும் நன்றி கூறினார்கள்.