தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், அவை பதிவு செய்வதற்கான சான்றிதழைக் கட்டாயம் பெற வேண்டும். இதன்படி பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007இன் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவுசெய்து சான்றிதழ் பெற வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யாமல் இல்லங்கள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி திருச்சி மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கால அவகாசம் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதிவரை 27 இல்லங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் 7 இல்லங்கள் பரிசீலனையில் இருந்தது. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆறு இல்லங்கள் தற்போது சமர்ப்பித்திருந்தன. இதன்பிறகு பதிவு செய்யாமல் நடத்தும் முதியோர் இல்லங்கள் சீல் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.