திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் சுற்றியுள்ள கிராமங்கள் வன்னியர் சமுதாயத்தினர் பலமாக உள்ள பகுதி. வன்னியர் சங்கத்தின் எழுச்சி பெரியதாக இருந்த காலகட்டத்தில் நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் சார்பில் வன்னியர் சங்கத்தின் அடையாளம் எனச் சொல்லப்படும் அக்னி கலசம் அமைக்கப்பட்டது. பட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த மருத்துவர் ராமதாஸ், அந்த அக்னி கலசம் சிலையை திறந்து வைத்தார்.
ஆண்டுகள் பல கடந்த நிலையில், பராமரிக்கப்படாமல் இருந்த அந்த அக்னி கலசம் சிலையை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை டூ வேலூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. அப்போது, இதற்கு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேர் நாயுடுமங்கலத்தில் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர். சாலை விரிவாக்கம் முடிந்ததும் மீண்டும் அச்சிலை அங்கு வைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு அங்கு அக்னி கலச சிலை வைக்கப்படவில்லை. இதுகுறித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அக்னி கலசம் சிலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டது என்றும் அதனால் மீண்டும் வைக்கமுடியாது என அதிகாரிகள் சொன்னதாக கூறியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதுமே அனுமதி பெறாமல் பல சிலைகள் உள்ளது. அதனை ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாயுடுமங்கலம் என்கிற கிராமத்தில் வன்னியர் சமுதாய கலசம் வைப்பது சாதி பிரச்சனையை உருவாக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர் . ஊர் பெயர்தான் நாயுடுமங்கலமே தவிர, அங்கு நாயுடு சமுதாயத்தினர் அவ்வளவாக இல்லை. அப்படியிருக்க இத்தனை ஆண்டுகளாக வராத சாதி பிரச்சனை இப்போது எப்படி வரும்? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்தவாரம் திடீரென திருவண்ணாமலை பாமக மா.செ பக்தவாச்சலம் தலைமையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி கலச சிலையை கொண்டுவந்து விடியற்காலை நேரத்தில் அதே இடத்தில் வைத்தனர். இதனை அறிந்த போலீஸார் அச்சிலையை எடுத்துச்சென்று கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சாலை பணி முடிந்ததும் கலசத்தை வைக்கிறேன் என வாக்குறுதி தந்த அதிகாரிகள், இதுவரை வைக்கவில்லை. இதன்பின்னால் ஆளும்கட்சியின் திட்டமிட்ட அரசியல் உள்ளது. திமுக வன்னியர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. கலசத்தை வைக்க அனுமதிக்கவில்லையென்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இயக்குநர் கவுதமன் உட்பட வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி நாயுடுமங்கலத்தில் கூடுவோம். கலசத்தை மீண்டும் வைப்போம், திரண்டுவாருங்கள் வன்னிய சொந்தங்களே என பாமக, வன்னியர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். இருசக்கர வாகனங்கள், கார்களில் வன்னிய சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள நாயுடுமங்கலத்திற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.இளங்கோவன் தலைமையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வகுமார், முன்னாள் எம்.எல்.ஏ மா.செ கணேஷ்குமார் புறப்பட்டனர். வாகனத்தில் புதியதாக அக்னி கலசம் கொண்டுவந்தனர். தடையை மீறி கலசம் வைப்போம் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை திடீரென கலசம் வைக்க அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கொண்டுவந்த அக்னி கலசத்தை பேருந்து நிழற்கூடம் அருகே பீடம் கட்டி அதில் வைத்து வன்னியர் சங்கத்தினரும், பாமகவினரும் வெற்றி கூச்சலிட்டனர். எந்த அசம்பாவிதத்திலும் தொண்டர்கள் ஈடுப்படக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தனர். சிலை அமைக்கப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.
பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1200 போலீஸார் வழி நெடுக பாதுகாப்புக்கு நின்றனர். போக்குவரத்தில் மிக முக்கிய சாலையான திருவண்ணாமலை - வேலூர் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.