Skip to main content

“கலைஞர் கொடுத்த இடம்...” - கண்ணீர் வடிக்கும் மக்கள்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Officials demolished 54 houses near Tiruttani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் கலைஞர் நகர் என்ற இடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அந்தப் பகுதி கூலித் தொழிலாளர்கள் 75 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களில் வீடுகளைக் கட்டிய மக்களுக்கு, அந்தப் பகுதியில் மின் இணைப்பு, சாலை வசதி, கழுவு நீர், கால்வாய் என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 20 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ, எம்.பி., எனப் பலரிடமும் மனு கொடுத்துப் போராடியுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கப் போகிறோம் என்று ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் போர்ட் ஒன்றை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள், இந்தப் போர்டை அப்புறப்படுத்த வேண்டும். எங்களுக்கு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில், 54 வீடுகளை நாங்கள் கட்டியுள்ளோம். பட்டாக்கள் அனைத்தும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுங்கள் என்று அரக்கோணம் எம்.பி., மாவட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் என மீண்டும் பலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்தச் சூழலில் திடீரென வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் திருத்தணி டி.எஸ்.பி.விக்னேஷ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி. புரத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர் இன்று அதிகாலை 5 மணி முதல் இந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த 54 வீடுகளையும் ஜே.சி.பி.மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். அப்போது ஜே.சி.பி மூலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

Officials demolished 54 houses near Tiruttani

“வட்டாட்சியர் விஜயகுமார் எங்களிடம் வீட்டை இடிக்காமல் இருக்கும் ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் நாங்கள் பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தால், வீடுகளை இடிக்க உத்தரவு போட்டுவிட்டோம் என்று எங்களிடம் நக்கலாகப் பேசினார். நாங்கள் இதனைக் கண்டித்து நீதிமன்றம் செல்வோம் என்று கூறியதற்கு, நீங்க எங்க வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள் என்று கூறி ஆபாசமாகத் திட்டினார்” எனப் பொது மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 54 வீடுகள் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபத்தில் இருக்கும் அந்தப் பகுதி மக்கள், எங்களது வீடுகளை இடித்ததால் தற்கொலை செய்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வந்த திமுக பஞ்சாயத்துத் தலைவர் சத்யராஜ் என்பவரிடம், “ ஏன் இப்படிச் செய்தீர்கள். இதற்கு திமுக ஆட்சிதான் காரணம். கலைஞர் பட்டா வழங்கினார். அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் இடிக்க உத்தரவிட்டார். நாங்கள் கூலித் தொழிலாளிகள் இப்போது நாங்கள் எங்கே செல்வோம் என்று கண்ணீர் மல்க அந்தப் பகுதி மக்கள் முறையிட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
young man passed away two days after his love marriage

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சொரக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன் அஜித். இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். உதகையை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகள் ராதிகா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார். இந்த நிலையில் அஜித்துக்கும் ராதிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி ராதிகாவை அஜித் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களின் குலதெய்வம் கோவிலில் அஜிதிற்கும், ராஜிகாவிற்கும் தமிழரசன் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து 5 ஆம் தேதி பதிவு திருமணம் செய்வதற்கான தகவல்களை விசாரித்து வருவதற்காக அஜித் வீட்டில் இருந்து கிளம்பி தனியாக சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும்  வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த போலீசார், ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணமால் போன அஜித்தை தேடி வந்தனர். 

இந்த நிலையில் அத்திமூரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அஜித்  என்பதை உறுதிசெய்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான இரண்டே நாளில் அஜித் மரத்தில் பிணமாக தொங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு எதாவது பிரச்சனையா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

இளம்பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு; மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவன்

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
  husband who beaten his wife

பெங்களூரூ அருகே சிக்கபிதரஹள்ளு பகுதியைச் சேர்ந்தவர் கரஷோத்தம். இவர் மல்லேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கரஷோத்தமிற்கும், ஷில்பா என்ற பெண்ணிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இந்தத் தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு ஆண் மகன் உள்ளார். 

இந்த நிலையில்தான் கரஷோத்தமிற்கும், அவருடன் பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இது குறித்து மனைவி ஷில்பாவிற்கு தெரியவர இளம்பெண்ணுடனான திருமணத்தை மீறிய உறவை கைவிடவேண்டும் எனக் கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு கரஷோத்தம் மறுப்பு தெரிவிக்க ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார் ஷில்பா.

இந்தச் சம்பவம் குறித்து கரஷோத்தம், ஷில்பா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் கரஷோத்தம், இளம்பெண்ணை தனது வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணும் கரஷோத்தம் ஒன்றாக இருபப்தை ஷில்பா புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த கரஷோத்தம் ஷில்பவை கடுமையாக தாக்கியுள்ளார்; மேலும் நீ உயிரோடு இருந்தால், எங்களால் வாழ முடியாது. நீ தற்கொலை செய்துகொள் என்று கூறி கொடூரமாக தாக்கியுள்ளார், 

இதனைத் தொடர்ந்து ஷில்பாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஷில்பா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கரஷோத்தை தேடி வருகின்றனர்.