கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் முகுந்தநல்லூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொரவளூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி, நெல்லை இயந்திரத்தின் மூலம் தூற்றி கொள்முதல் செய்து கொண்டிருக்கும்போது, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க வேண்டும் என நிலைய அதிகாரி விஜயகுமார் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் விவசாயியின் வறுமையின் காரணமாக, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க முடியாது 30 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். ஆனால் நிலைய அதிகாரி விஜயகுமார், பழனிசாமியின் நெல் ஈரமாக உள்ளது எனக் கூறி, பாதி மூட்டைகள் கொள்முதல் செய்த பின்பு, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை, மீண்டும் விவசாயியின் சாக்கில் தொழிலாளர்கள் மாற்றினர். இதனால் விவசாயி பழனிசாமி, செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
இரவு பகலாக கஷ்டப்பட்டு வாங்கிய கடனையும், குடும்ப செலவையும் சமாளிப்பதற்காக நெல் மூட்டைகளை விற்பனை, செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் மூட்டைக்கு 50 கொடு, 100 கொடு என அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் ஏழை, எளிய விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
லஞ்சம் தர மறுத்த விவசாயியின் மூட்டையை, ஈரம் எனக் கூறி நிறுத்திய நிலைய அதிகாரி விஜயகுமார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.