கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் ஆதரவாளரான பால விநாயகர் ப்ளூ மெட்டல் உரிமையாளர் தங்கராஜ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தபோது வீடு பூட்டி இருந்த நேரத்தில் காம்பவுண்ட் சுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏறி குதித்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
இதனிடையே எந்தவித போலீஸ் பாதுகாப்பின்றி பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யத் தனியாகச் சென்றதால் தள்ளுமுள்ளு மற்றும் திமுக தொண்டர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னும் சில இடங்களில் அதிகாரிகள் அங்கு கூடி இருந்த தொண்டர்களால் விரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சோதனைக்கு சென்றனர்.
ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு போலீசார் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனைக்காக சென்றனர். குறிப்பாக இதுவரை 20 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதில் மூன்று வாகனங்கள் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் வெளியே சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.