மகாகவி பாரதியார் தன் கடைசி நாட்களில் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கோயில் யானையால் தாக்கப்பட்டு சிகிச்சை எடுத்த வந்த அவர், இந்த வீட்டில்தான் 1921 செப்டம்பர் 11ந் தேதி மரணத்தைத் தழுவினார். பாரதி வாழ்ந்த அந்த இல்லம், தமிழக அரசால் அவரது நினைவில்லமாக 93-ல் மாற்றப்பட்டு, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது.
இந்த இல்லத்தில் இருக்கும் அரங்கம், இலக்கியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கும் விடப்படுகிறது. இதன்படி இங்கு எத்தனையோ கலை இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தநிலையில் ’சென்னை முத்தமிழ்ச்சங்கத்தினர்’ தங்கள் அமுதசுரபி அறக்கட்டளை சார்பில்,100 கவிஞர்கள் பங்கேற்கும் ஒரு மெகா கவியரங்க நிகழ்வை அங்கே நடத்த முடிவெடுத்தனர். இதற்கான இசைவை, அறக்கட்டளை நிர்வாகி பாவலர் ஞானி, பாரதியார் நினைவில்லக் காப்பாளர் கிருஷ்ண மூர்த்தியிடம் பெற்றார். இதற்கான முன்பணத்தையும் கொடுத்து, ஏப்ரல் 21-ந் தேதி விழாவை நடத்த இடத்தைப் பதிவுசெய்தார்.
இந்தநிலையில் இல்லக் காப்பாளர் அமுதசுரபி அறக்கட்டளை நிர்வாகிகளிடம், நீங்கள் நடத்தும் விழாவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்று விசாரித்திருக்கிறார். அதற்கு நிர்வாகிகள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றனர்.
இதைக்கேட்ட இல்லக் காப்பாளர்‘வைரமுத்து தி.மு.க. ஆதரவாளர் ஆச்சே... அதனால் நீங்கள் இங்கே விழாவை நடத்த அனுமதிக்க முடியாது” என்று கறாராக மறுத்துவிட்டார். அதோடு விழா விதிமுறைகளை பின்பற்றமுடியாததால், இங்கே நாங்கள் விழாவை நடத்த விரும்பவில்லை என்று பாவலர் ஞானியிடம் வற்புறுத்தி எழுதி வாங்கிக்கொண்டு, வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். விழா நடக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில், இப்படி திடீரென விழாவிற்கு அடாவடியாக இடம்தர மறுத்திருக்கிறார் இல்லக் காப்பாளர்கிருஷ்ணமூர்த்தி இதனால் திகைத்துப்போன நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அரக்கபரக்க ஓடி, அருகில் இருந்த ராமானுஜர் திருமண மண்டபத்தைப் பிடித்து, அந்த மெஹா கவியரங்க நிகழ்வை சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறார்கள்.
வைரமுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாரதி இல்லப் பொறுப்பாளர் இடம் தர மறுத்திருப்பது, இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
.