கரூர் வெண்ணைமலையில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நலவாரிய அலுவலகம் உள்ளது. இங்கு தொழிலாளர் நலத்துறை ஆய்வாளராக பழனிசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இரவு 11 மணியளவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விடிய, விடிய நடந்த ஆய்வில் தொழிலாளர் நல ஆய்வாளர் பழனிசாமியின் வாகனத்தில் இருந்த, ரூ.28,500-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். 7ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை, இந்தச் சோதனை நடைபெற்றது. அலுவலர் பழனிசாமியின் லஞ்ச வேட்டைக்கு உதவியாக இருந்த ஓய்வு பெற்ற, அரசு அலுவலக உதவியாளர் ராமனிடமிருந்து 8,600 ரூபாயும் பறிமுதல் செய்தனர். இது மட்டுமில்லால், 'ரெமென்ஸ்' என்ற துணிக்கடை உரிமையாளர்களை மிரட்டி, இந்த அதிகாரிகள் லஞ்சமாக வாங்கிய ரூபாய் 7,500 மதிப்புள்ள பேண்ட், சர்ட், துணிகளையும் பறிமுதல் செய்தனர்.