இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மின்சார ரயிலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மற்ற இடங்களைக் காட்டிலும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படியாக இருக்கிறது. மாஸ்க் அணியாதவர்கள் யாரும் ரயில் நிலையங்களின் உள்ளே தற்போது வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் மற்ற இடங்களைக் காட்டிலும் ரயில் நிலையங்களில் கரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் தடுப்பூசிப் போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம் என்றும், அவர்களுக்கு சீசன் டிக்கெட், ரிட்டன் டிக்கெட் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் காலை 7 முதல் 9.30 வரையிலும், மாலையில் 4.30 முதல் இரவு 7 மணி வரை பயணிக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளது.