Skip to main content

அக். 1க்குள் சிவாஜி மணிமண்டபத்தை திறக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
அக். 1க்குள் சிவாஜி மணிமண்டபத்தை திறக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

அக்டோபர் 1 ஆம் நாளன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ, நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை திறந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமையவேண்டும் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி, கடந்த 21 -07 -2015 அன்று சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நான் உட்பட அனைத்துக் கட்சித்  தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தையும்  சிவாஜி சமுகநலப்பேரவை  முன்னெடுத்து நடத்தியது.
அதன்பின்னர் நடிகர் திலகத்திற்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று 26 -08 -2015 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது பணிகளும் நிறைவடைந்துள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் அமைந்திருந்த சிவாஜி சிலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அகற்றப்படும்போது, சிலையை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவே அமைக்க வேண்டும் என்று கோரி, சிவாஜி சமுகநலப்பேரவை சென்னை உயர்நிதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரச நான்கு வார கால அவகாசம் கேட்டது.

ஆனால்,  அந்த நான்கு வாரகால அவகாசம் முடிவதற்குள்ளாகவே, சென்னை கடற்கரை சாலையில் கம்பீரமாக நின்றிருந்த நடிகர்திலகத்தின் சிலையை, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, தமிழக அரசு அகற்றி மணிமண்டபத்தில் வைத்துள்ளது.  புதிதாக நடிகர்திலகத்தின் ஒரு சிலையை கடற்கரை சாலையில் நிறுவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னையில் நடிகர்திலகத்திற்கு இருந்த ஒரே சிலையும் அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மணிமண்டபத் திறப்பு குறித்து அரசு தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.  

இந்நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் நாள் நடிகர்திலகத்தின் 90-வது பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் நடிகர்திலகத்தை நினைவுகூற, மாலை அணிவித்திட, சிலையோ, நினைவிடமோ சென்னையில் இல்லாத நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் நாளன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ, நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை திறந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்