பண்ருட்டி அருகே பூங்குணம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊராட்சியை இணைக்கூடாது என்று மனு அளித்துள்ளனர். ஆனால் ஊராட்சியை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டம், கலைஞர் வீடு, பிரதமர் வீடுகள் கட்டும் திட்டம், அரசு நலத்திட்டங்கள் பறிபோகும் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு கழுத்தை நெரிக்கும் அபாயம் ஏற்படும் என பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு சி.பி.எம் கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்ட செயலாளர் எஸ்.கே ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சியை இணைத்தால் மக்கள் எந்தவிதத்தில் பாதிக்கப்படுவார்கள் என பேசினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தங்கராசு, மோகன், கங்காதுரை உள்ளிட்ட கட்சியினர், அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மறு பரிசீலனை செய்திட வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறினார்.