கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு செவிலியர் மாணவ, மாணவிகள் தீப ஒளி ஏற்றி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சண்முகம் தலைமைத் தாங்கினார். அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் இராம கதிரேசன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தீப ஒளியின் மகிமையை எடுத்துரைத்து மன அழுத்தத்தை நீக்க அன்பை கடைப்பிடிக்க திருமூலர் கூறிய அன்பும், சிவனும் ஒன்றே என்பதை சுட்டிக்காட்டி இடையூறுகளின்போது அமைதியைக் கையாளவும், நாம் உயர் நிலையை அடைந்தவுடன் இந்நிலைக்கு காரணமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மறவாது இருக்கவும், சமுதாயத்திற்கு சேவை செய்வதில் ஈடுபடுத்தி கொள்ளுமாறு செவிலியர்களை கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் லாவண்யாகுமாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் கலாவதி, இணைப்பேராசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர்.
அண்ணாமலை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தினசம்பத், பேராசிரியர் ரவிச்சந்திரன், துணைவேந்தரின் நேர்முக செயலா் பாக்கியராஜ், மருத்துவமனை பேராசிரியர்கள், டாக்டர் சுபஸ்ரீ, டாக்டர் கோபிகிருஷ்ணா, இணை பேராசிரியர்கள், பிற ஆசிரியர்கள, செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.