Skip to main content

“குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன...” - முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

The number of issue this year is less than last year says CM MK Stalin

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.09.2023) மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதேபோல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதற்காக, காவல்துறையில் உள்ள காவலர்கள் முதல் காவல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல்துறையின், பணித் திறன் பன்மடங்கு மேம்படும். கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. ஆனால் சில ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும்.

 

இதனைத் தவிர்க்க, காவல்துறையின் மாவட்ட அலுவலர்கள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும், ஊடகங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களைப் பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல பலனை அளிக்கும். திமுக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து, தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

The number of issue this year is less than last year says CM MK Stalin

 

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோட், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், ஆவடி மாநகர காவல் ஆணையர் கி. சங்கர், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்