சென்னையில் ‘செஞ்சமர்’ படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள், ஆர்.வி. உதயகுமார், அரவிந்த்ராஜ் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய சீமான், படக்குழுவினர் வைத்திருந்த போஸ்டரில் தலைப்பை தவிர மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் வைத்திருந்ததை குறிப்பிட்டு பேசியிருந்தார். அதில், “எனக்கு தமிழில்தான் அழைப்பிதழ் கொடுத்தார்கள். ஆனால் இங்க வந்து பார்த்தால் போஸ்டரில் செஞ்சமர் என்ற தலைப்பை தவிர மற்ற அனைத்தும் ஆங்கில வார்த்தைகளால் இருக்கிறது. நாம என்ன படத்தை அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவிலா வெளியிட போறோம். தமிழ்நாட்டில்தான் வெளியிட போறோம். தமிழிலேயே எழுதி இருக்கலாமே. எல்லா மொழிகளும் மனிதர்களால்தான் பேசப்பட்டது. ஆனால் என்னுடைய மொழி மட்டும்தான் இறைவனால் பேசப்பட்டது. எங்களுடைய மூதாதையர்கள் சிவனும், முருகனும் பேசிய மொழி தமிழ்மொழி. கூடுமான வரை தாய்மொழி தமிழை காப்பாற்ற போராட வேண்டும். எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியில் சொற்கள் இருக்கிறது. அப்படியிருக்கும் போது ஏன் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் பயன்படுத்தும் இங்கிலீஷ் நான் (தமிழ்) போட்ட பிச்சை. ஆயிரக்கணக்கான சொற்கள் என்னிடமிருந்து கடனாக வாங்கி உருவாக்கப்பட்ட மொழி இங்கிலீஷ். ‘கொல் - கில்(Kill), காசு - கேஷ் (cash), கலாச்சாரம் - கல்ச்சர்(culture), உடன் - சடன்(sudden), பேச்சு - ஸ்பீச்(speech), பஞ்சு - ஸ்பாஞ்(sponge), தாக்கு ஒரு ஏ போட்டு - அட்டாக்(attack) இப்படி அவனே ஒரு பிச்சக்கார மொழிய வச்சிக்கிட்டு இருக்கான். ஆனா நீ அவன் மொழியில எழுதிட்டு இருக்க. வெள்ளைக்காரனே தமிழ் படிச்சுட்டு அழகா தமிழ்ல பாடம் எடுத்துக்கிட்டு இருக்கான். கால்டுவெல், வீரமா முனிவர் என நம்ம ஊருக்கு வந்தவர்கள் எல்லாம் தமிழ படிச்சுட்டு தமிழ்ல நூல் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க. நாம் தான் நம்ம மொழியை பேச வேண்டும். எல்லாரும் அவரவர் தாய் மொழியை பேசிக்கிட்டு இருக்காங்க. ஆனால் நாம் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டிருக்கிறோம்.” என்றார்.