2021- ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்களை சில தினங்களுக்கு முன்பு அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. அதில் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் செப்டம்பர்- 30 ஆம் தேதி வரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்றும், பணியின் போது 31 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா உள்பட பல்வேறு மாநில அரசுகளும் என்பிஆர் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது எதிர்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் மக்கள் தொடர்ந்து இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் கிடைக்காததால், தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் என்பிஆர் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை கொடுக்கின்றனர். கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.