Skip to main content

நீதிமன்ற உத்தரவு; வீடுகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை முயற்சி

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Residents are protesting against sealing houses Chidambaram

 

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட வேங்கான் தெருவில் உள்ள குருநமச்சிவாய கோயிலைச் சுற்றி 24 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருந்து வரும் இடம் ஆக்கிரமிப்பு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கு தொடுத்தனர்.  

 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 24 குடியிருப்புகளையும் காலி செய்து 30 நாட்களுக்குள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க காலக்கெடு விதித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத் தீர்ப்பின்படி அங்கு குடியிருப்பவர்களுக்கு வீடுகளை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நீதிமன்றக் காலக்கெடு நேற்று புதன்கிழமையோடு முடிவடைந்ததை அடுத்து வீடுகளைப் பூட்டி சீல் வைப்பதற்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் காவல்துறை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு வந்தனர்.

 

அப்போது குடியிருப்பு வாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், கவிதா சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, காங்கிரஸ் நகரத் தலைவர் மக்கீன் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் ஒரு வாரக்காலம் அவகாசம் வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

 

இதனிடையே, இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென்று அந்தக் கூட்டத்தில் இருந்த ரகு என்ற ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெண் ஒருவர் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்ததைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், கூட்டத்தில் ஒரு பெண் மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவர் மீது தண்ணீர் தெளித்து மயக்க நிலையிலிருந்து மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

 

இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் வரும் ஜனவரி 7-ந் தேதிக்குள் குடியிருப்புகளை குடியிருப்பு வாசிகளே காலி செய்து கொள்ளுவதாக எழுதிக் கொடுத்தனர். அதனடிப்படையில் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்தப் பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்