Skip to main content

'விஜய்க்கு முன்னாடியே இதை நாங்க சொல்லிட்டோம்'-எடப்பாடி பரபரப்பு பேட்டி

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
 'Now Vijay is saying what we said' - Edappadi Palaniswami interview

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மாநாடு நடத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதனுடைய தலைவர், திரைப்பட நடிகர் விஜய் மாநில மாநாட்டை அவர் கட்சி சார்பாக நடத்தி இருக்கிறார். ஊடகத்தில் பார்த்தோம். அவருடைய அழைப்பை ஏற்று அவருடைய ரசிகர்கள் தொண்டர்கள் அங்கே சென்றிருந்தார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவிக்கிறார். அதில் இது சரியா அது சரியா என்று நாம் சொல்ல முடியாது.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இப்பொழுது தான் அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு அமைக்கப்படும். அதிமுகவை விஜய் அதிகமாக விமர்சிக்கவில்லை என்றால் அதிமுக நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். அதிமுகவிற்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படிதான் நாங்கள் நடப்போம். அப்படி ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கிறது. கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் தான்.

நாங்கள் ஒத்த கொள்கையுடைய  கூட்டணியில் இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அப்படியென்றால் திமுக மற்றும் அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் எல்லாம் ஒத்தக்கொள்கை உடைய கட்சிகளா? அப்படி என்றால் ஒரே கட்சியாக இருந்திருக்கலாமே. ஏன் தனித்தனியாக கட்சி இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. கூட்டணி தேர்தல் நேரத்தில் உருவாக்கப்படுவது. ஆனால் கொள்கை என்பது நிலையானது. திமுகவிற்கும் பாஜகவிற்கும் டேய் டீலிங் இருக்கிறது என முன்னதாகவே  நாங்கள் சொன்னதை விஜய்யும் சொல்லி இருக்கிறார். முதலில் நாங்கள் சொல்லி இருந்தோம் இப்பொழுது மற்றவர்களும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுகவின் வாக்கை யாரும் ஈர்க்க முடியாது. எல்லாரும் எம்ஜிஆருடைய பெயரை தான் சொல்கிறார்கள். இப்பொழுதும் எம்ஜிஆரின் பெயரைச் சொன்னால்தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. அந்த அளவிற்கு எங்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்ந்தார்கள்''என்றார்.

சார்ந்த செய்திகள்