Skip to main content

பிரச்சாரத்தை காந்தி சிலையில் முடித்த நோட்டா பிரச்சாரக்குழுவினர்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

2004 வரை நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த புதுக்கோட்டை 2009 ல் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல பிய்த்துப் போட்டுவிட்டு தொகுதியை பறித்துக் கொண்டார்கள். அதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள், சென்னை வரை சென்று உண்ணாவிரதம் இருந்தனர். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்று பயனில்லை. அதிருப்தியை காட்ட வேறு வழியின்றி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு என்று 49 ஓ. படிவம் வாங்கி பூர்த்தி செய்தவர்களின் எண்ணிக்கை 13680 பேர்.

 

 

nota

 

அதன் பிறகு 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் நோட்டாவுக்காண பிரச்சாரம் சூடுபிடித்தது. இந்த முறை 49 ஓ என்ற படிவம் வாங்க வாக்காளர்கள் அச்சபடுகிறார்கள் என்பதால் மின்னணு வாக்கு இயந்திரத்திலேயே நோட்டா என்ற பட்டன் பொருத்தப்பட்டது.

 

 

அதன் பலனாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு (புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள்) 22848 வாக்குகளும், கரூர் தொகுதிக்கு ( விராலிமலை ) 13763 வாக்குகளும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு ( ஆலங்குடி, திருமயம் ) 8042 வாக்குகளும், ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு ( அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி) 6279 வாக்குகளும் என்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50932 வாக்குகள் தொகுதி வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தொகுதி பறிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டாவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

 

இது இல்லாமல் பல ஆயிரம் பேர் தங்கள் எதிர்ப்பை காட்ட வாக்கு சாவடிக்கு செல்லவில்லை. இத்தனை எதிர்ப்புகளை காட்டியும் கூட தொகுதியை மீட்கமுடியவில்லை என்ற விரக்தி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் அதிகமாக உள்ளது. 

 

 

அதனால் இந்த 17 வது மக்களவை தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்போம் கடந்த தேர்தல்களை விட அதிகமான வாக்குகளை நோட்டாவில் பதிவு செய்து எதிர்ப்பை தெரிவிப்போம் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காந்தி பேரவையினர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் ஆர்வம் காட்டினார்கள். இதில் தொகுதி மீட்புக்குழுவில் இருந்த பல்வேறு அமைப்பினரும் மறுசீரமைப்பு வரும் வரை காத்திருப்போம் என்று ஒதுங்கியுள்ளனர். ஆனாலும் காந்தி பேரவை மட்டும் அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் தங்கள் சின்னங்களுக்கு பிரச்சாரம் செய்து வந்த நிலையில் காந்தி பேரவை நோட்டாவுக்கு பிரச்சாரம் செய்து துண்டுபிரசுரங்களையும் கொடுத்து வந்தனர்.

 

 

நேற்று தேர்தல் பரப்புரைக்கு கடைசி நாள் என்பதால் காந்தி பேரவையினர் நோட்டாவுக்காண பிரச்சாரத்தை புதுக்கோட்டை காந்தி சிலை அருகில் முடித்தனர். பாரம்பரியமிக்க புதுக்கோட்டை தொகுதியை மீட்கும் வரை நாடாளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பிரச்சாரம் செய்வதும், வாக்களிப்பதும் தொடரும் என்றனர் பிரச்சாரக்குழுவினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்