Skip to main content

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் இறந்தவர் குடும்பத்திற்கு  நிவாரணம் அறிவிப்பு

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

 Notice of relief to the student's relative who witnessed the Nanguneri incident

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த மாணவனின் உறவினருக்குத் தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரை சமூக ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2  மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரையின் தாயிடம், தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண நிதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த  சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்தக் குற்றச் சம்பவத்தில் மாணவன், மாணவி தாக்குதலுக்கு உள்ளான போது அதனை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்