கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜா அறிவித்துள்ளார். இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை எந்தவிதமான பள்ளிகளும் திறக்க வேண்டாம். விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. எக்காரணம் கொண்டும் எந்த மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் ஐந்தாவது நாளாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.