கடந்த 19 ம்தேதி நடந்த ஏழாம் கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் நடைபேற்ற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு பெரும்பாலான இடங்கள் கிடைக்கும் அதற்கு அடுத்தபடியாக ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சில தொகுதிகள் மட்டும் கிடைக்கும் அதில் இந்த எடப்பாடி ஆட்சி கவிழவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச்செயலாளரும், தேனி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருமான தங்கதமிழ்செல்வனிடம் கேட்டபோது....
மீடியாக்களில் வெளிவந்த கருத்து கணிப்புகள் எல்லாம் உண்மையான கருத்து கணிப்பு இல்லை அது எல்லாமே பொய். கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்தை திணித்து இருக்கிறார்கள். இந்த தேர்தலில் எங்கள் கட்சியும் கனிசமான இடங்களை பிடிக்கும் அதிலையும் நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கப் போகிறது. அதன்மூலம் இந்த எடப்பாடி ஆட்சியை கலைக்க ஓட்டளிப்போமே தவிர திமுகவுக்கு ஆதரவு தரமாட்டோம். அம்மா ஆட்சி என்று சொல்லி கொண்டு தங்களை மட்டும் வளர்த்து கொண்டு அம்மாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்த இந்த இபிஎஸ்,ஒபிஎஸ் ஆட்சி வருகிற 23 ம்தேதி க்கு பிறகு மக்களே வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர்.
அதுபோல் ஒபிஎஸ் தேர்தலுக்கு 300 கோடி செலவு செய்து இருக்கிறார். அதை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறது அப்படி இருந்தும் தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த அளவுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததின் மூலம் தனது மகன் வெற்றி பெற்று விடுவார் என ஒபிஎஸ் பகல்கனவு கண்டு வருகிறார். அதுவும் நிறைவேற போவதில்லை.
தேனி பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி பேரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஆளும் கட்சி தோல்வி பீதியில் வன்முறையில் இறங்கவும் தயாராகி வருகிறார்கள். அதற்காக தான் ஓட்டு எண்ணிக்கையின். போது துணை ராணுவம் பாதுகாப்பு போடவேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். அதை தொடர்ந்து தான் கலெக்டரும் இரண்டு கம்பெனி துணை ராணுவம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
எழுதி இருப்பதாக கேள்விப்பட்டேன் என்று கூறினார்.