ஒரு சாலை விபத்து. சுறுசுறுப்புடன் சம்பாரித்த இளைஞரை சுருட்டிப் போட்டுவிட்டது. கல்யாண வயதில் தங்கச்சியை வைத்துக் கொண்டு, அடுத்த வேலை உணவுக்கே, அந்த இளைஞன் துடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் அம்மா காலமாகிவிட்டார். அப்பா கண்டுகொள்ளாமல் போய்விட்டார். உறவினர்கள் நெருங்கவில்லை. ஈ, எறும்பு அண்டவில்லை. அதனாலென்ன தாயாகமாறினார், அவரின் கடைசித் தங்கை. நாள் முழுக்க கூலி வேலை பார்த்துவிட்டு அண்ணனையும் கவனித்துக் கொள்கிறார் அந்தச் சின்னத்தாய்.
நீங்கள் இந்த வேதனையை செய்தியாக்கினால், அவர்களுக்கு எதாவது உதவி கிடைக்குமே என நக்கீரனுக்கு தகவல் வந்தது. கேமராவுடன் திருமன்பட்டி நோக்கி விரைந்தோம்.
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். லட்சுமனின் வீடு எங்கே இருக்கிறது என விசாரித்தோம். நீல தார்ப்பாய் தெரியும் ஓட்டு வீடு என ஊரார் அடையாளம் சொன்னார்கள். லட்சுமணனின் வீட்டுக்குச் சென்றோம். நாடா கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். நம்மை அறிமுகம் செய்துகொண்டோம். சட்டென லட்சுமணனின் முகம் மலர்ந்தது. வீட்டை சுற்றிப் பார்த்தோம். ஊரார் சொன்னபடி நீல தார்ப்பாய் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் அது ஓட்டு வீடு அல்ல. ஓட்டை வீடு. ஆம், மண்சுவர்கள் கொடுக்கும் குருட்டு நம்பிக்கையில் உத்திரம் நிற்கிறது. சீமை ஓடுகள் சிதறிக் கிடக்கிறது. தரையும் மண் தரைதான். அங்காங்கே தரை முழுதும் பொத்தல்கள் இருக்கிறது. ஓடுகளை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தது சூரிய வெளிச்சம்.
இளம்பெண் ஒருவர் நம்மை வரவேற்றார். அவர்தான் லட்சுமணனின் தங்கை என்பதை உணர்ந்துகொண்டோம். குடும்ப சூழலை கேட்டோம்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. தாய் உடல் நலக் குறைவால் காலமான நிலையில், தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். லட்சுமணனுடன் சேர்த்து நான்கு குழந்தைகள். இவர்களை தந்தை கண்டுகொள்ளவில்லை. குடும்ப பாரம் மொத்தமாக லட்சுமணனின் தோளில் இறங்கியது. லட்சுமணனுடன் பிறந்தது மூன்று சகோதரிகள். மூன்று பேரையும் கரைதேற்ற வேண்டிய கட்டாயச் சூழல் லட்சுமணனுக்கு உருவானது.
இதனால், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட லட்சுமணன், பத்து வருடங்களுக்கு முன்பு, கோயம்புத்தூருக்கு பஸ் ஏறியுள்ளார். அங்கு உள்ள ஒரு பஞ்சர்கடையில் வேலைசெய்து குடும்ப வறுமையை போக்கி வந்துள்ளார். அப்போது, நண்பர் ஒருவருடன் டூவீலரில் பயணித்த லட்சுமணன், எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கியுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட லட்சுமணன், நினைவு தப்பி கோமாவிற்கு போயுள்ளார். சில வாரங்களிலேயே நினைவு திரும்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, விபத்தின் பாதிப்பால், வயிற்றுப் பகுதிக்கு கீழே உள்ள உறுப்புகள் அனைத்தும் செயலிழந்துள்ளது. ஆண்டவன் நமக்கு கை, கால்களை கொடுத்துள்ளான், அதை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் எனத் துணிந்த லட்சுமணனுக்கு, இது பேரிடியாய் இறங்கியது. அந்த விபத்து அவரை முடக்கிப் போட்டுள்ளது.
மூத்த சகோதரிக்கு திருமணமாகிவிட்டது. தங்கை ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு தங்கை ஸ்நேகா. இவர்தான், லட்சுமணனின் தாயாக இருந்து அவரைக் கவனித்துக் கொள்கிறார். பத்தாம் வகுப்புடன் புத்தக வாசத்தை மறக்கடித்தது குடும்ப வறுமை. அருகிலுள்ள நூற்பாலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப வருமானத்தில், வீட்டையும், லெட்சுமணனையும் பார்த்துக் கொள்கிறார். குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, உடற்கழிவை வெளியேற்ற உதவுவது என லட்சுமணனுக்கு சகலமும் சிநேகாதான்.
லெட்சுமணனிடம் பேசினோம். 'என் தங்கச்சி குளிக்க கூடம் இடமில்ல. அதோ தெரியுதுல.. ரோட்டு ஓரமா.. அங்கதான் குளிக்கும். டாய்லட் கட்டனும். தங்கச்சிகளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கனும்' என்ற எண்ணத்தில் தான் வேலைக்கு போனேனுங்க.. ஆனால் அந்த ஆக்சிடேன்ட்டில் என் வாழ்க்கையே தொலைஞ்சுபோச்சு. இப்ப என்னால சுயமா ஒன்னுக்கு கூட போகமுடியாது. வீட்டுக்கு பாரமா இருக்கேனு தோணுது. இருந்தாலும் ஏதாவது செஞ்சு, என் தங்கச்சிகள கரை சேர்க்கனும். அதுதான் என்னுடைய லட்சியம் எனச் சொல்கிறார்.
கரை சேரட்டும் இவர்களது கனவுகள்.