கோவை மாவட்டம் இராஜ வீதி அடுத்த சண்முகா நகர் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். 45 வயதான இவர், மோகன் டை என்ற பெயரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில், கடந்த 12 வருடங்களுக்கு மேலாக, தங்க நகை கடைகள் மற்றும் மொத்த வியாபாரமாக தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார். மோகன் குமாரின் பட்டறையில் வடமாநிலத்து இளைஞர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர்.
மேலும் ஒருவரை வேலைக்கு சேர்த்தால், வேலை சுமை குறையும் என்ற எண்ணத்தில், பட்டறைக்கு ஆள் தேடியுள்ளனர். அந்த சமயத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் வித்தால் போச்லே என்கிற 21 வயது இளைஞன், மோகன் குமாரின் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சில மாதங்கள் இதே பட்டறையில் வேலை பார்த்த பிரமோத் வித்தால், கடையின் அணுகுமுறைகளை நன்றாக நோட்டமிட்டுள்ளார். நகைகள் எங்கே வைக்கப்படும், கடை சாவி எங்கே இருக்கும் என்பதை முழுவதுமாக தெரிந்துகொண்டுள்ளாராம்.
இதனையடுத்து, நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் பட்டறை திறக்கும் முன்பு, பிரமோத் வித்தால் அங்கு வந்துள்ளார். மற்ற ஊழியர்களும் உரிமையாளரும் பணிக்கு வராத நிலையில் பட்டறை சாவியை எடுத்துக்கொண்டு, கடையிலிருந்த 1 கிலோ அளவிலான தங்க நகை மற்றும் கட்டிகளைத் திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார். அதன் பிறகு, மோகன்குமாரும், மற்ற ஊழியர்களும் வழக்கம் போல் கடைக்கு வந்துள்ளனர். அப்போது பட்டறையிலிருந்த பொருட்கள் கலைந்து கிடந்தது. பிரமோத் வித்தாலையும் காணவில்லை. அங்கிருந்த நகைகளை ஆராய்ந்து பார்த்தபோது, சுமார், 1,067 கிராம் தங்க நகைகளை பிரமோத் வித்தால் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதைத் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன் குமார், வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தங்க நகைகளுடன் பிரமோத் வித்தால் போஸ்லே சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், நகை திருடியவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் போலிசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரைப் பிடிக்க போலீசார் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். இந்த சம்பவம், கோவை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.