ஒரே நாளில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிரம்பி வருவதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக பல்வேறு விளக்கங்களை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கியுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலமான அக்டோபர், செப்டம்பர் காலங்களில் ஃப்ளு காய்ச்சல் அதிமாக குழந்தைகளை தாக்கும். இந்நிலையில் இந்த வருடமும் ஃப்ளு காய்ச்சல் அதிமாக குழந்தைகளை தாக்கியுள்ளது. இதன்காரணமாகவே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்த 300 படுக்கைகளும் நிரம்பியுள்ளதாகவும், கூடுதல் படுக்கை வசதிகளை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ''பருவ மழைக்கு முன்னாள் குளிர் காற்று ஈரப்பதம் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் பாதிப்பு என்பது சாதாரணமாக உலகம் முழுவதும் வருகின்ற ஒன்று. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு கரோனா தாக்கம் ஏற்பட்ட நிலையில் இதன் பாதிப்பு குறைந்திருந்தது. ஊரடங்கு, முகவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்த பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால் 2018, 2017 ஆகிய ஆண்டுகளில் இன்றைக்கு வந்திருப்பதை காட்டிலும் அதிகம் இருந்தது. இருந்தாலும் இன்று பயப்பட வேண்டிய சூழல் இல்லை. தற்பொழுது முகவசம் அணிவதிலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதிலும், அடிக்கடி கைகளை கழுவுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. எனவே இந்தநிலையில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல், தும்மல், இருமல் உள்ளவர்களிடம் இருந்து 2 மீட்டர் அளவிற்கு குழந்தைகளை தள்ளியே வைத்திருப்பது பாதுகாப்பான ஒன்று'' என்றார்.