
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர், மிலிட்டரி காலனி நூர் பள்ளிவாசல் ஜமாத் மற்றும் மதரஸா கமிட்டி உறுப்பினர்கள் அதன் தலைவர் சையது அப்துல் கப்பார் தலைமையில் இன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது; “எங்களின் நூர் பள்ளிவாசலில் தென்காசியை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2020 வரை இஸ்லாமிய மத குருவாக பணிபுரிந்து வந்தார். எங்களது பள்ளிவாசல் மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று நன்கொடை வசூல் செய்த வகையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
தற்போது அந்த நன்கொடை வசூல் பணத்தை வைத்து அவரது தனிப்பட்ட முறையில் டிரஸ்ட் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது பெயரில் பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் எங்களது பள்ளிவாசலுக்கு வசூல் செய்த பணத்தையும் ஆவணங்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இஸ்லாமியர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.