தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தற்பொழுது அதிமுக தலைமை ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் துவங்கியுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருடன் நேர்காணல் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக இந்த தேர்தலில் தனித்து நிற்பதாக அறிவித்துள்ள நிலையில் பாஜக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் நகர்ப்புற தேர்தலை அதிமுக சந்திக்க இருக்கிறது என்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.