3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், தினகரன் அணியில் பொறுப்பில், பதவியில் இருக்கிறார்கள். மேலும், டிடிவி தினகரனோடு 3 பேரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன்.
அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளேன். பேரவைத் தலைவர் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வார் என்று கூறினார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது,
தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிமுக ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து விட வேண்டும் என பிரதமரும், ஆளுநரும் செயல்படுகிறார்கள். கட்சி சார்பற்ற சபாநாயகர் நடவடிக்கை பாரபட்சமற்ற முறையில் இருக்க வேண்டும். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.