தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும். உரியக் கட்டுப்பாடுகள் மட்டுமே கரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க இயலும் எனவும் முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.