புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவம் உள்பட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டு, கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு அறைக்குப் பின்பக்க கேமரா வேலை செய்யவில்லை என்று திருமயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரகுபதி புகார் தெரிவித்திருந்தார்.
மூன்று அடுக்கு பாதுகாப்பிற்காக சுழற்சி முறையில் துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வேட்பாளரின் முகவர்களும் தங்கியிருந்து கண்காணித்து வருகின்றனர்.
இதில் விராலிமலை, கந்தர்வகோட்டை தொகுதிகளுக்கான பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள துணை ராணுவம், காவல்துறையினர் மற்றும் முகவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் பல நாட்களாகவே தண்ணீர் வராததால், கடும் அவதியடைந்துள்ளனர். நேற்று (19/04/2021) இரவு வட மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் கழிவறைக்குச் சென்று தண்ணீர் இல்லாமல் தவித்த போது உள்ளூர் காவல்துறை ஒருவர் குடிதண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்துச் சென்று கொடுத்து உதவியுள்ளார். அவசரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து உதவிய உள்ளூர் காவலருக்கு வட மாநிலத் துணை ராணுவ வீரர் நன்றி சொன்னதோடு, 'இங்கே ஏன் இப்படி வச்சிருக்காங்கன்னு' கேட்டு விட்டு தலையில் அடித்துக் கொண்டு சென்றுள்ளார்.