
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு அனைத்து மகளிர் போலீசார் ஜூன் 20ம் தேதி கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் அவருடன் நடிகை கணவன் - மனைவியாக வசித்துள்ளார். அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை. கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளார். கருக்கலைப்புக்கு கட்டாயப்படுத்தியதாக கூற முடியாது. எந்த அந்தரங்க படங்களையும் வெளியிடவில்லை என வாதிட்டார்.
புலன் விசாரணை முடிந்து விட்டது. ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகப் போவதில்லை. சாட்சிகளை கலைக்கப் போவதில்லை எனவும் வாதிட்டார். புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவருடன் கணவன் - மனைவியாக வாழத் துவங்கியதாகவும், சட்டமன்றத்துக்கும் மனைவி என சாந்தினியை அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனை காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், அவரது ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும், நடிகைக்கு படங்களும், குறுந்தகவலும் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.