தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து பற்றாக்குறை உள்ளது. இருந்தபோதிலும் மக்கள் யாரும் இதனால் அச்சப்பட தேவையில்லை. அது குணமாகக் கூடிய நோய்த்தொற்று தான். மருந்துக்கு பெரிய அளவில் ஆளாய் பறக்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஒரு மருந்து மட்டுமல்ல 3,4 மருந்துகளை மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அதற்கு பெரிய அளவில் அலைய வேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே முதல்வர் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதனுடைய விளைவாகத்தான் வருகிற 21-ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வழங்கும் என்கின்ற அறிவிப்பு வந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் ஜி.எஸ்.டி கூட்டத்தில் பேரிடர் சம்பந்தமான இந்த நோய்த்தொற்று தடுப்பு பொருள்களுக்கு, மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார். அதற்கு கிடைத்த வெற்றிதான் இது'' என்றார்.