சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மத்திய கலாச்சாரத்துறைக்கும் மாணவிகள் ஆன்லைன் மூலம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கல்லூரியை சுற்றி பாதுகாப்பிற்காக போலீசாரை வைத்துள்ளோம். இதுவரைக்கும் கிரிமினல் வழக்கிற்கான எந்த ஒரு எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை. ஏதாவது ஒரு கம்ப்ளைன்ட் வந்தால் கண்டிப்பாக நாங்கள் விசாரணை செய்வோம். அதுவரை யாரும் தவறான தகவல்களை பரப்பக் கூடாது என வலியுறுத்துகிறோம்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'முதல்வரின் செல்லுக்கும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் கடிதம் கொடுத்துள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்' என்ற கேள்விக்கு, ''அப்படி ஒன்றும் எங்களுக்கு தகவல் வரவில்லை. இது தொடர்பாக பார்ப்பதற்கும் விசாரிப்பதற்கும் மகளிர் ஆணைய சேர்மன் போயிருக்கிறார்'' என்றார்.