இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், 'இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்டுகளை இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி. இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு பாசிஸ்டுகளை இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி.
ஒன்றியத்தின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும் நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்ற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். வேலைவாய்ப்புகளை பெருக்கவோ, பண வீக்கத்தை கட்டுப்படுத்தவோ எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் எந்த திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.