இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட வேண்டும் என பலமுறை அரசு மற்றும் போக்குவரத்து காவல்துறை, நீதிமன்றங்கள் சார்பில் உத்தரவுகள் வெளியான போதிலும் அவை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. அபராதம் விதிக்கப்பட்டாலும் சிலநாட்கள் கடைப்பிடிக்கப்பட்டுவிட்டு பின்னர் நீர்த்துப்போகும் நிலையிலேயே உள்ளது 'ஹெல்மெட் கட்டாயம்' என்ற அறிவிப்பு.
இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போடாவிட்டால் டாஸ்மாக் மது முதல் பெட்ரோல் போன்ற எதுவும் கிடைக்காது என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், டாஸ்மாக் ஆகிய இடங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் எனக்கூறப்பட்டுள்ளது.