மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தைத்திருநாள் முதல் நாளன்று, 'ஜல்லிக்கட்டு' போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை மாற்றியமைக்க உத்தரவிடக்கோரி அன்பரசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்தச் சமூகத்திற்கோ, காளைக்கோ 'முதல் மரியாதை' கிடையாது. அதேபோல் ஜல்லிக்கட்டு விழா, கணக்கு விவரங்களைப் பராமரிக்க தனி வங்கிக் கணக்கைத் தொடங்கவேண்டும். அதேபோல் ஜல்லிக்கட்டு விழாவில், அரசியல் கட்சி, சமூகம் தொடர்பான கொடிகள், பேனர்கள் வைக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்த அறிக்கையின் முழு விவரங்களை வீடியோ பதிவாக தாக்கல் செய்யவேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.