குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அட்டைப் பூச்சியைப் போல பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் குட்கா ஊழல் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் காப்பாற்ற அரசு முயன்றதால் தான் இவ்வழக்கை உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு மாற்றியது. ஆனாலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய பினாமி ஆட்சியாளர்கள், சிவக்குமார் என்ற இளநிலை அதிகாரியை பினாமியாக மாற்றி அவர் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததிலிருந்தே குட்கா ஊழல் வழக்கைக் கண்டு தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர முடியும்.
குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதற்காக கூறியுள்ள காரணங்கள் முக்கியமானவை. குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது தான் முறையாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய கருத்துக்குப் பிறகும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அட்டைப் பூச்சியைப் போல பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது ஆகும். இந்த அவலம் தொடரக்கூடாது.
குட்கா ஊழலில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. அமைப்பு இனியும் தாமதிக்காமல் விசாரணையை தொடங்க வேண்டும். குட்கா நிறுவனங்களிடம் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.