சமீபத்தில் கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
சென்னை நீதிமன்ற வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் என்பவர் என்பவர் கிருஷ்ணகிரியில் நடந்த போலி என்.சி.சி முகாம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார்பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கிலும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. எனவே முழுமையாக விசாரிக்க வேண்டுமானால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வாதங்கள் வைக்கப்பட்டது. நீதிபதிகள் இது தொடர்பாக அரசின் தரப்பின் கருத்தைக் கேட்டனர். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதிலளிக்கப்பட்டது. தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதிட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் 'பிரச்சனைக்குரிய பள்ளி மட்டுமல்லாமல் மேலும் 2 பள்ளிகளிலும் சேர்த்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதை கவனத்தில் கொண்டு சிபிஐ விசாரணை தேவையில்லை' எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.