கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்.எல்.சி நிறுவனம். கடந்த 1957ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டு, நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. 1962-ஆம் ஆண்டு, முதலாவது அனல்மின் நிலையம் திறக்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கியது.
பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 யூனிட்டில் 100 மெகாவாட் மின்சாரமும், 6 யூனிட்டில் 50 மெகாவாட் என 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், முதல் அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் முடிந்த பின்பு, பராமரிப்பு செய்யப்பட்டு 58 ஆண்டுகளாக மின் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று என்.எல்.சி உயர் அதிகாரிகள் தலைமையில், முதல் அனல் மின் நிலையத்தை மூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மேலும், முதல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாற்று இடத்தில் பணிமாறுதல் வழங்கப்பட்டது. 58 ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மின்சாரம் அளித்துவந்த முதல் அனல் மின் நிலையம் இன்று முதல் ஓய்வு பெற்றது