நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை என்றும், விருப்பப்படியே இருப்பதாகவும் ஈரோட்டைச் சேர்ந்த பிராணாசுவாமி கூறியதால், அவரை மீட்கக் கோரிய மனுவை சென்னை உயரநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003- ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அவரை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்கக் கோரி அவரது தாய் அங்குலக்ஷ்மி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (06.01.2020) நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பிராணாசுவாமியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் அவரிடம் தாயாரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த பிராணாசுவாமி, தனது விருப்பத்தின் பேரிலேயே நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் தன்னைக் கட்டாயபடுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், பிராணாசுவாமியின் தாயார் அங்குலக்ஷ்மி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.