போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 'மோடி அட் ட்வென்டி-ட்ரீம்ஸ் மீட்ஸ் டெலிவரி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ''மத்திய அரசின் சார்பில் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் எல்லாம் எப்படி இன்டெர் கனெக்டெட், காம்போசிட் ஸ்கீம்களாக உள்ளது என இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு சாப்டரையும் படிக்கும்பொழுது ஒரு புதிய மோடியை பார்ப்பது போல் நமக்கே தெரியும். கட்சிக்காரர்கள் மட்டுமல்லாது மக்களும் படிக்கும் பொழுது மோடியின் டைம் மேனேஜ்மென்ட், மோடியின் டிசிப்ளின், மோடியின் விஷன் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது. ஆட்சியில் இருப்பதற்காக வரவில்லை அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வந்துள்ளதாக மோடி கூறுவார். ஒவ்வொரு மாநிலத்திலும், அதுவும் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும் அதில் சில மாவட்டங்கள் பின்தங்கி இருக்கின்றன. அவற்றையும் முன்னேற்ற வேண்டும் என்று கருத்தில்கொண்டு 116 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னேறிய மாநிலங்களில் ஒரு பின்தங்கிய மாவட்டம் இருந்தாலும் அவர்களையும் அரவணைத்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டத்தைத் துவங்கியது மோடிதான். இதில் பாராபட்சம் பார்க்கவில்லை. அது இந்தக் கட்சி ஆளும் இடமா அந்தக் கட்சி ஆளும் இடமா என யோசிக்காமல், குறுகிய மனப்பான்மையில் சிந்திக்காமல் செயல்பட்டு வருகிறார். மோடிக்கு ஏன் வெற்றிகள் வருகிறது என்றால் ஒவ்வொரு நிலையையும் யோசித்து, மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும், அவர்களின் ஒப்பீனியன் வர வேண்டும், இந்த திட்டம் நம்ம திட்டம் என மக்கள் உரிமை கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் முன்னேற முடியும் என்ற அவரது எண்ணம்தான்'' என்றார்.