மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று (12.11.2018) இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில், இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் சி.பி.சி.ஐ.டியால் போடப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தனித்தனியாக கடந்த 8ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். நேற்று, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நிர்மலா தேவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய 3 பேரின் மனுக்களும் நாளை (13.11.2018) விசாரிக்கப்படும் என்றும், 3 பேரையும் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதன்படி பேராசிரியர் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
அரசு தரப்பில் எங்கள் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் எந்த வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என கூறியும் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி 3 பேரும் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது .
நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணையில் நிர்மலா தேவி வழக்கறிஞர் இது குறித்து வாதத்திற்கு அவகாசம் கேட்ட நிலையில் அதை மறுத்த நீதிபதி நாளை மறுநாள் 15 ஆம் தேதி 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, அன்றைய தினம் இது குறித்து விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.