நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீராவி முருகன் என்ற ரவுடி போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடிவந்தனர். தூத்துக்குடி புதியம்புத்தூரில் உள்ள நீராவிமேடு என்ற இடத்தில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என்று அழைக்கப்பட்டுவந்த முருகன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 37க்கும் மேற்பட்ட கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகன் மீது வழக்குகள் உள்ளது. குறிப்பாக திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக நீராவி முருகன் மீது வழக்குகள் இருந்தது. ஒட்டன்சத்திரம் பகுதியில் மருத்துவர் வீட்டில் தம்பதிகளை கட்டி போட்டுவிட்டு வீட்டிலிருந்த 150 பவுன் நகை, 25 லட்சம் ரூபாய் பணம், கார் உள்ளிட்டவற்றை திருடி சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நீராவி முருகனை தேடிவந்தனர்.
இந்நிலையில் நெல்லை களக்காடு பகுதியில் நீராவி முருகனை கைது செய்யமுற்பட்டபோது போலீசாரை திரும்ப தாக்கி வெட்ட முயன்றதால் நீராவி முருகன் என்கவுன்டர் செய்யப்பட்டதாகவும், 4 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.