Skip to main content

ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினர்...  கலைஞரின் நெடுங்கால நண்பர்!- மறைந்தார் க.அன்பழகன்!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.  

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். 

 

 Nine-time member of the assembly ... left the post for Tamil Eelam



மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் காட்டூர் கிராமத்தில் 1922 டிசம்பர் 19ஆம் தேதி பிறந்த க.அன்பழகன் அவர்களின் இயற்பெயர் இராமையா. சுயமரியாதைக் கொள்கைகளில் கொண்ட ஈடுபாட்டால் இராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றினார். அதன்பின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார் அன்பழகன். அதோடு மட்டுமல்லாமல் 1957ல் திமுக முதன் முதலில் சந்தித்த சட்டமன்றத் தேர்தலில் எழும்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்பழகன்.

அதன்பின் 1962 செங்கல்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வென்று மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1967 ஆம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 இல் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் அன்பழகன்.

 

 Nine-time member of the assembly ... left the post for Tamil Eelam

 

ஒன்பது முறை சட்டப்பேரவைக்கு தேர்வானவர் என்ற சிறப்புக்குரியவர் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். 1984 இல் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி தனது எம்எல்ஏ பதவியை துறந்தவர்களில் அன்பழகனும் ஒருவர். தமிழினக் காவலர் கலைஞர், தமிழ்க் கடல் உட்பட 40க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞரின் உற்ற தோழர் ஆகவும், 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூகநலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய பொதுச் செயலாளர் பேராசிரியர் சில நாட்கள் உடல் நலிவுற்று  இருந்த நிலையில் 7-3-2020 அதிகாலை ஒரு மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்தார். கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டு கழகக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

dmk

 

இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரின் வீடு அமைந்திருக்கக் கூடிய கீழ்ப்பாக்கம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படயிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்