நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று கனமழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நீலகிரியில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது. நீலகிரியில் மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். நீலகிரியில் மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு திமுக எம்.பி.க்கள் சார்பில் ரூபாய் 10 கோடி வழங்கப்படும் என தெரிவித்தார். நீலகிரியில் இரண்டு நாட்களாக ஆய்வு செய்த அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் தமிழக முதல்வரிடம் அளிக்க உள்ளதாக கூறினார்.