மதமாற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதற்காக திருபுவனம் ராமலிங்கத்தைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயக கட்சி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தடுத்தற்காக திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 2019 பிப்ரவரி 5-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி உள்பட 12 பேரைக் கைது செய்தது. இவர்கள் தவிர, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேரைச் சேர்த்து, மொத்தம் 18 பேருக்கு எதிராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஓராண்டாக சிறையில் இருப்பதாகக் கூறி, ஜாமீன் கோரி நிஜாம் அலி என்பவர் தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிஜாம் அலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாததால் சந்தேகத்தின் பலனை அளித்து ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. பயங்கரவாத செயல்களைத் தடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ராமலிங்கம் கொலை வழக்கு சாதாரண கொலை வழக்கு தான் எனவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் அதே பகுதியில் வசிப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகள் தைரியமாக சாட்சி சொல்லமுடியாது என்ற அரசுத்தரப்பு வாதத்தில் நியாயம் உள்ளதாகக் கூறி, நிஜாம் அலியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், தேசிய புலனாய்வு அமைப்பின் ரகசிய சாட்சிகளிடம் ஜூன் 30-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.