சென்னை அடையாறு பாலத்தில் வேகமாக வந்த பைக் நிலை தடுமாறியதில் பைக்கில் ஆண் நண்பருடன் பயணித்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று சென்னை அடையாறு பாலத்தில் பைக் ஒன்று விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க அங்கு சென்ற போலீசார் அடிபட்டு கிடந்த இளைஞர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் மீட்டனர். இதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்பதும், அந்த இளம்பெண்களில் ஒருவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சென்னைக்கு வேலை தேடிவந்த அந்த இளம்பெண்கள் சேப்பாக்கத்தில் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளனர். அப்பொழுது 'கிளப் ஹவுஸ்' என்ற செல்போன் செயலியின் மூலம் பிரவீனுக்கும் இரு இளம்பெண்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கிளப் ஹவுஸ் செயலியில் 'மீட் அப்' என்ற குரூப்பில் இருந்த அனைவரும் ரம்ஜான் விடுமுறையை களிக்க முடிவு செய்து ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றுள்ளனர். இரவு பார்ட்டியை முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு பிரவீனுடன் இந்த இரு பெண்களும் பைக்கில் கிளம்பிய நிலையில், அடையாறு மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த பிரவீன் வேகத்தைடையை கவனிக்காமல் பைக்கை செலுத்தியதால் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திருச்சியை சேர்ந்த பெண் மட்டும் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகைச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்றுவரும் பிரவீனின் பாக்கெட்டிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதையில் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.